நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; நாட்டு வெடிகுண்டு வீச்சு; 48 பேர் மீது வழக்கு


நடுக்கடலில் மீனவர்கள் மோதல்;   நாட்டு வெடிகுண்டு வீச்சு; 48 பேர் மீது வழக்கு
x

கூடங்குளம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதிக் கொண்டனர். நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் அருகே நடுக்கடலில் மீனவர்கள் மோதிக் கொண்டனர். நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் இடையே தகராறு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை மீனவர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி மீன்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இடிந்தகரை மீனவர்கள் நெல்லை-கன்னியாகுமரி மாவட்ட கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். அங்கு அவர்கள் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்து இருந்தனர்.

அப்போது, அங்கு சின்ன முட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வந்தனர். அவர்கள் நாட்டுப்படகு மீனவர்களின் வலையை சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த மோதலின்போது திடீரென்று விசைப்படகு மீது நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் படகு சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து உடனடியாக கூடங்குளம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இருதரப்பு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

48 பேர் மீது வழக்கு

பின்னர் சின்னமுட்டத்தை சேர்ந்த விடைப்படகு உரிமையாளர் சில்வெஸ்டர் கொடுத்த புகாரின் பேரில், இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 36 பேர் மீதும், இடிந்தகரை நாட்டுப்படகு மீனவர் அரசு கொடுத்த புகாரின் பேரில், சில்வெஸ்டர் உள்பட 12 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story