பேரூராட்சி அலுவலகத்தில் திரண்ட மீன் தொழிலாளர்கள்


பேரூராட்சி அலுவலகத்தில் திரண்ட மீன் தொழிலாளர்கள்
x

மீன்சந்தை ஏலம் தொடர்பாக திங்கள்சந்தை பேரூராட்சி அலுவலகத்தில் திரண்ட மீன் தொழிலாளர்கள்

கன்னியாகுமரி

திங்கள்சந்தை

திங்கள்சந்தை பேரூராட்சி கூட்டம் கடந்த வாரம் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மீன் சந்தையில் உள்ள ஸ்டால்களை தனித்தனியாக ஏலம் விட தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தனித்தனியாக ஏலம் விடுவதால் சிறிய குட்டை மீன் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தீர்மானம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலையில் பேரூராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த மீன் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திங்கள்சந்தை மீன் தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சுமன், செயல் அலுவலர் அம்புஜம், மீன் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் ஆன்றனி, துணைத் தலைவர் டேவிட், செயலாளர் தினேஷ், பொருளாளர் ஜின்டோ ஆகியோர் செயல் அலுவலர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story