நித்திரவிளை போலீஸ் நிலையத்தை மீனவ மக்கள் முற்றுகை


நித்திரவிளை போலீஸ் நிலையத்தை மீனவ மக்கள் முற்றுகை
x

கைதான நபரை விடுவிக்கக்கோரி நித்திரவிளை போலீஸ் நிலையத்தை பங்கு தந்தைகள் மற்றும் மீனவ மக்கள் முற்றுகையிட்டனர். 11 மணி நேரமாக போராட்டம் நீடித்ததால் பதற்றம் உருவாகி வெளி மாவட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கைதான நபரை விடுவிக்கக்கோரி நித்திரவிளை போலீஸ் நிலையத்தை பங்கு தந்தைகள் மற்றும் மீனவ மக்கள் முற்றுகையிட்டனர். 11 மணி நேரமாக போராட்டம் நீடித்ததால் பதற்றம் உருவாகி வெளி மாவட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

முள்வேலி விவகாரம்

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் புனித யூதா கல்லூரியின் பின்புறத்தில் 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் நாகர்கோவிலை சேர்ந்த அகமது ரசீத் என்பவருக்கு சொந்தமானது. இந்த நிலத்திற்கு கல்லூரி நிர்வாகமும் உரிமை கோரி வந்த நிலையில் வருவாய் துறையினர் அகமது ரசீதுக்கு உரிமை உள்ளது என்று அதற்கான சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இதனை தொடர்ந்து அகமது ரசீத் நித்திரவிளை போலீசாரின் பாதுகாப்புடன் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்தார். இதனை தூத்தூர் மண்டல மீனவ மக்கள் மற்றும் 8 ஊர் பங்கு தந்தைகள் சேர்ந்து முள்வேலியை அப்புறப்படுத்தியதாக தெரிகிறது.

ஒருவர் கைது; போலீஸ் நிலையம் முற்றுகை

இதுதொடர்பாக 8 பங்கு தந்தைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் முள் வேலியை அகற்றுவதில் தலைமை ஏற்று வழிநடத்திய சின்னத்துறை ஊரை சேர்ந்த ராஜூ‌ என்பவரை நேற்று காலை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து தூத்தூர் மண்டல 8 பங்கு தந்தைகள் மற்றும் மீனவ பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நித்திரவிளை போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

பதற்றம் உருவானது

இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு வந்தனர். இதற்கிடையே கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.

கைதான நபரை விடுவிக்கக்கோரியும் மற்றும் பங்கு தந்தைகள், மீனவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடுவது இல்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போலீசாருக்கு எதிராக தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் பதற்றம் நிலவியது.

இதனையடுத்து கூட்டத்தை கலைக்கும் விதமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டது. மேலும் நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்துக்கு விரைந்து போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார்.

போலீஸ் குவிப்பு

அதன் பிறகும் மீனவர்கள் சமாதானம் அடையாமல் அங்கேயே திரண்டனர். பங்கு தந்தைகளும் போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.

இதற்கிைடயே கைதான நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் போலீஸ் வாகனங்களை முற்றுகையிட்டனர்.

பதற்றம் அதிகரிக்கவே தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் கைதான நபரை போலீசார் ஜாமீனில் விட்டனர். இதன் பிறகு தான் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 10 மணிக்கு முடிவடைந்தது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், போலீஸ் நிலையம் முற்றுகை தொடர்பாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது வீடியோ காட்சி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story