மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள்


மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள்
x

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. இதையொட்டி குளச்சலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குளச்சல்,

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. இதையொட்டி குளச்சலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறார்கள்.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இந்த தடைக்காலம் 2 பருவ காலமாக அமல்படுத்தப்படுகிறது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் கடந்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இந்த தடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

ஐஸ்கட்டிகளை ஏற்றும் பணி தீவிரம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300 விசைப்படகுகள் உள்ளன. தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளில் என்ஜின்களை பழுது பார்ப்பது, பேட்டரி மற்றும் வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நீங்குவதையொட்டி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறார்கள். வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை தயார் செய்து, விசைப்படகுகளில் ஐஸ் கட்டி, தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு உள்ளனர்.

தொழிலாளர்கள் உற்சாகம்

ஒரு விசைப்படகு ஆழ்கடலுக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும். அதில் கணவாய், இறால், புல்லன், சுறா, கேரை போன்ற உயரக மீன்கள் இருக்கும். கடந்த 2 மாதங்களாக கட்டுமரங்களில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நீங்குவதால் விசைப்படகினர், மீன் சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story