மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்


மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
x

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி உவரி அருகே கூடுதாழையில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி உவரி அருகே கூடுதாழையில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துண்டில் வளைவு

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை மீனவ கிராமத்தில் கடந்த 10-ந் தேதி திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 30 மீட்டர் தூரம் வரை கடல்நீர் ஊருக்குள் புகுந்து, அங்கு நின்ற மின்கம்பமும் சாய்ந்தது. கடற்கரையில் சுமார் 10 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டதால் படகுகளை நிறுத்த முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து அங்கு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடந்த 11-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலில் இறங்கி போராட்டம்

இந்த போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. இதையொட்டி காலையில் கோரிக்கையை வலியுறுத்தி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் போராட்ட குழு தலைவர் ரோசிங்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அங்கிருந்து ஒன்றிய கவுன்சிலர் அருணா டென்சிங் தலைமையில் கிராம மக்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கருப்பு கொடிகளை ஏந்தியபடி கடற்கரைக்கு சென்றனர். தொடர்ந்து கடலில் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் மாலைவரை நடந்தது.

நாளை ஆலோசனை கூட்டம்

நாளை (சனிக்கிழமை) கூடுதாழையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க இருப்பதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.


Next Story