மீன் தொழிலாளர் கூட்டமைப்பினர் கையெழுத்து இயக்கம்
கோடியக்கரையில் மீன் தொழிலாளர் கூட்டமைப்பினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
டெல்லியில் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி மீன்பிடி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோடியக்கரையில் மீன்தொழிலாளர்களின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மீன்பிடி தொழிலாளர்களின் கூட்டமைப்பு சங்க மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் காளியப்பன் வரவேற்றார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கின்ற வரைவு கடற்கரை மண்டல மேலாண் திட்டம் மற்றும் நீல பொருளாதாரம் கொள்கை ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். பாரம்பரிய மீனவ மக்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்து மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். மீன் பதப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பி.எப்., ஓய்வூதியம் மற்றும் அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் அமல்படுத்த வேண்டும். நீர், நிலைகளில் மீன் பிடிப்பதற்கு உள்நாட்டு மீனவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது.