கடலில் திசை மாறி செல்லும் அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள்
கடலில் திசை மாறி செல்வதால் அதிராம்பட்டினம் பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலில் திசை மாறி செல்வதால் அதிராம்பட்டினம் பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தொழில்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியாக அதிராம்பட்டினம் உள்ளது. இங்கு உள்ள தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன.
இதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மழை மற்றும் பனி காலங்களில் கடலில் மீன் பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பும்போது கரைப்பகுதி சரிவர தெரியாததால் திசை மாறி செல்லும் நிலை உள்ளது.
கலங்கரை விளக்கம்
இதனால் மீனவர்கள் சரியான நேரத்தில் தாங்கள் பிடித்து வரும் மீன்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாமல் போய்விடுகிறது. அத்துடன் சிரமப்பட்டு மீன் பிடித்து களைத்து போய் கரை திரும்பும் நிலையில் திசை தெரியாததால் மேலும் கூடுதலாக அலைய வேண்டி உள்ளது என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே சரியான திசை நோக்கி வருவதற்கு உறுதுணையாக அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திசைமாறி செல்லும் நிலை
இதுபற்றி அதிராம்பட்டினம் கரையூர் தெரு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயராமன் கூறுகையில், 'தஞ்சை மாவட்ட கடற்கரையை பொறுத்த வரை மனோராவில் மட்டுமே கலங்கரை விளக்கம் உள்ளது. மற்றபடி தம்பிக்கோட்டை முதல் கீழத்தோட்டம் வரை கலங்கரை விளக்கம் இல்லாததால் மழை மற்றும் பனி காலங்களில் மீன்பிடித்து விட்டு நாங்கள் கரைக்கு வரும் போது எங்களுக்கு சரியான திசை தெரியாமல் முத்துப்பேட்டை மற்றும் கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு திசை மாறி செல்ல வேண்டியுள்ளது.
இதனால் எங்களுக்கு கூடுதல் நேரம் அலைச்சல் உண்டாகிறது. அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். எனவே உடனடியாக அதிராம்பட்டினம் கடற்கரையோர பகுதியில் கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டும்' என்றார்.