கடல் சீற்றத்தால் விசைப்படகு மூழ்கியது 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


கடல் சீற்றத்தால் விசைப்படகு மூழ்கியது  4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:30 AM IST (Updated: 4 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே கடல் சீற்றம் காரணமாக ரூ.20 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மயிலாடுதுறை

பூம்புகார் அருகே கடல் சீற்றம் காரணமாக ரூ.20 லட்சம் மதிப்புள்ள விசைப்படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

படகு மூழ்கியது

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் இளையராஜா, பிரபு, மாணிக்கம் ஆகியோருடன் நேற்று அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

பூம்புகார் துறைமுகத்துக்கு கிழக்கு பகுதியில் அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்தளித்து. இதனால் நிலை தடுமாறிய விசைப்படகு திடீரென கடலில் மூழ்கியது.

4 மீனவர்கள் உயிர் தப்பினர்

இதனையடுத்து அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக மீட்டு பாதுகாப்பாக கரை சேர்த்தனர்.

இதுதொடர்பாக மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வானகிரியில் இருந்து மீனவர்கள் மாற்று படகுகள் மற்றும் பொக்லின் எந்திரத்துடன் அங்கு சென்று கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

3 மணிநேர போராட்டத்துக்கு பின்பு கவிழ்ந்த விசைப்படகினை கரைக்கு இழுத்து வந்தனர். மீட்கப்பட்ட விசைப்படகு இரண்டாக உடைந்து முற்றிலும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இது குறித்து படகின் உரிமையாளர் பாஸ்கர் கூறுகையில், 'முற்றிலும் சேதமடைந்த விசைப்படகிற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றார். இதனிடையே சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் இதுகுறித்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story