சிங்கம்புணரி அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம்பட்டி பன்னி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம்பட்டி பன்னி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
அறுவடை பணிகள் முடிந்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலம்பட்டி ஊராட்சியில் பன்னி கண்மாய் சுமார் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 250 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் இந்த கண்மாய் நீரை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில் விவசாய பணிகள் முடிவுற்று அறுவடை நடைபெற்ற நிலையில், கண்மாயில் தண்ணீர் குறைந்தது. இதை தொடர்ந்து கிராமத்தார்கள் ஒன்றிணைந்து மீன்பிடி திருவிழாவை கண்மாயில் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று கண்ணமங்கலம்பட்டி கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களால் கண்மாய் கரையில் பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதையடுத்து கண்மாய் கரையை சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள், கண்மாய்க்குள் இறங்கி, மீன்களை பிடிக்க தொடங்கினார்கள்.
10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர்
இதில் கோட்டை வேங்கைபட்டி, நாட்டார்மங்கலம், பருவப்பட்டி, கப்பாரப்பட்டி, சாத்திணிப்பட்டி, வகுத்தொழுவன் பட்டி, குமரிபட்டி சிங்கம்புணரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்மாயில் இறங்கி பல வகையான வலைகளை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.
இதில் கட்லா, லோகு, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன்கள் வலையில் சிக்கின. அதிக அளவில் ஜிலேபி மீன்கள் சிக்கின. சிலரது வலைகளில் பாம்புகளும் சிக்கின. தங்கள் கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டதால் வருங்காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையான மழை பெய்து விவசாயம் பெருகும் என்று அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.