சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா


சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம். குறிப்பாக மழை நீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் உள்ள தண்ணீரை கொண்டு பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. சிங்கம்புணரி ஒன்றியத்துக்குட்பட்ட முறையூர் மொறக் கண்மாய் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் விவசாய பணிகள் முடிவுற்று அறுவடைகள் நடைபெற்ற நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியது. கிராமத்தார்கள் ஒன்றிணைந்து கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை முறையூர் கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்மாய் கரையில் நின்று பச்சைக்கொடி காட்டினர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் சென்று மீன்களை பிடிக்க தொடங்கினார்கள். முறையூர், மு.சூரக்குடி, கல்லம்பட்டி, அரசினம்பட்டி, காளாப்பூர், முத்துச்சாமிபட்டி, ஈலுவாண்டிபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்மாயில் இறங்கி கச்சா, தூரி, ஊத்தா வலைகளை கொண்டு மீன்பிடித்தனர். இதில் கட்லா, லோகு, சிசி, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன் வகைகள் வலையில் சிக்கின. கிடைத்த மீன்களை வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர்.


Next Story