மீன் வியாபாரி தலை துண்டித்து கொலை


மீன் வியாபாரி தலை துண்டித்து கொலை
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மீன் வியாபாரி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி அருகே மீன் வியாபாரி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகன் கார்த்திக். இவருக்கு சொந்தமாக, தட்டப்பாறை அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டியில் ஆட்டுப்பண்ணை உள்ளது.

நேற்று காலை அங்குள்ள ஒரு அறை முன்பு வாலிபரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தட்டப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்தனர்

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி ரூரல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்திஸ், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

வாலிபரின் தலையை கைப்பற்றிய ேபாலீசார், அவரது உடலை தேடினர். அப்போது உடல் அங்குள்ள அறையில் கிடந்தது தெரியவந்தது. பின்னர் தலை மற்றும் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மீன் வியாபாரி

போலீசார் நடத்திய விசாரணையில், தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த லிங்கப்பாண்டி மகன் சின்னத்துரை (வயது 37) என்பதும், மீன் வியாபாரி என்பதும் தெரியவந்தது.

அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆட்டுப்பண்ணையில் வேலை பார்த்து வந்த உடன்குடியை சேர்ந்த லிங்கம் என்பவர் தலைமறைவாகி விட்டார். மேலும் அங்கு சிலர் அமர்ந்து மது அருந்தியதற்கான தடயங்களும் காணப்பட்டன.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

எனவே, லிங்கம் மற்றும் சிலர் சேர்ந்து சின்னத்துரையை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, கொலையுண்ட சின்னத்துரைக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story