உடல்தகுதி விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம்
திண்டுக்கல் மாவட்ட அளவில் உடல்தகுதி விழிப்புணர்வு அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நாளை நடக்கிறது.
நெடுந்தூர ஓட்டப்பந்தயம்
பொதுமக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் உடல்தகுதியை பேணுவது அவசியம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்ட அளவில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நடக்கிறது. இந்த நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், 25 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரிடமும் வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும். அதேபோல் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலுடன் நாளை காலை 6 மணிக்கு கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்குவந்து பங்கேற்பு உறுதி படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
பரிசு தொகை
இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-ம் பரிசு வரை தலா ரூ.1,000-ம், சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த பரிசு தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுவதால் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகலுடன் வரவேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது74017 03504 எனும் செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.