தொழிற்சங்கங்கள் சார்பில் கொடியேற்றி ஆர்ப்பாட்டம்
மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் சார்பில் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் நகராட்சி இந்திய கம்யூனிஸ்டு கட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி), ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் நகர துப்புரவு பணியாளர் சங்க தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி, பொருளாளர் ஆர்.கோபி வரவேற்றனர். கவுரவத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் கொடியேற்றி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில் மயில்வாகனன், அன்வர் பாஷா, பைரோஸ் உள்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (சி.ஐ.டி.யு.) சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பொன்னுசாமி, தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணன், துணைத் தலைவர்கள் சின்னத்தம்பி, சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சின்னண்ணன் கொடியேற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் பவானி, துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி பேசினார், நிகழ்ச்சியில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த காசி, ஜோதி, நரசிம்மா, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
திருப்பத்தூர் நகராட்சியில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், ஒப்பந்த முறையை கைவிடக் கோரியும், துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்