சென்னிமலை அருகே நெகிழ்ச்சி சம்பவம் எஜமானரை காப்பாற்ற பாம்பை கொன்று உயிரிழந்த நாய்


சென்னிமலை அருகே நெகிழ்ச்சி சம்பவம் எஜமானரை காப்பாற்ற பாம்பை கொன்று  உயிரிழந்த நாய்
x

சென்னிமலை அருகே எஜமானரை காப்பாற்ற பாம்பை கொன்ற நாயும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே எஜமானரை காப்பாற்ற பாம்பை கொன்ற நாயும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 வருடங்களாக

சென்னிமலை அருகே உள்ள சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன். விவசாயியான இவர் தனது வீட்டில் கலப்பின ரகத்தை சேர்ந்த நாய் குட்டி ஒன்றை கடந்த 7 வருடங்களாக வளர்த்து வருகிறார். நஞ்சப்பன் குடும்பத்தினர் தங்களது வீடு அருகே உள்ள தோட்டத்திற்கு செல்லும் போது இந்த நாயும் பாதுகாப்பாக உடன் சென்று வருவது வழக்கம். அப்போது வயல்களில் இருந்த பாம்புகளை இந்த நாய் மோப்பம் பிடித்து நஞ்சப்பன் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக கடித்து கொன்று உள்ளது.

வேட்டையன் நாய்

இதுவரை வீட்டு வாசலுக்கு வந்த 5-க்கும் மேற்பட்ட பாம்புகளை இந்த நாய் கடித்து குதறியதால் இந்த நாய்க்கு வேட்டையன் என நஞ்சப்பன் குடும்பத்தினர் பெயர் வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நஞ்சப்பன் குடும்பத்தினர் நெல் வயலில் உள்ள வரப்புகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த வேட்டையன் நாய் சத்தமாக குரைத்து கொண்டு இருந்துள்ளது. இதனைக் கண்ட நஞ்சப்பன் அங்கு சென்று பார்த்த போது அங்கு கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று துடிதுடித்த நிலையில் இறந்து கிடந்தது.

பொதுமக்கள் நெகிழ்ச்சி

மேலும் வேட்டையனும் மயங்கிய நிலையில் இருந்துள்ளது. கண்ணாடி விரியன் பாம்பு வேட்டையனை கடித்துள்ளதை உணர்ந்த நஞ்சப்பன் உடனடியாக வேட்டையனை காரில் தூக்கிப்போட்டு சென்னிமலை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கால்நடை மருத்துவர் சுரேஷ் வேட்டையனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வேட்டையன் பரிதாபமாக இறந்து விட்டது.

தன்னை வளர்த்த எஜமானர் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கண்ணாடி விரியன் பாம்பை கொன்று தானும் உயிரிழந்த நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story