பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் - சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்கள் நிரம்பின
சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டதால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் பரிதவித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் பலர் கார்களில் செல்கின்றனர்.
இதனால் அதிக நேரம், போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் தற்போது விரைவாக சொந்த ஊருக்கு செல்ல பலர் விமான பயணத்தை நாடுகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனாலும் கட்டண உயர்வு பற்றி கவலைப்படாமல் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் விமானங்களில் பயணம் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலையில் இருந்தே பலர் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கிவிட்டனர். இதனால் அதிக கட்டணம் கொடுக்க முன் வந்தாலும் விமானங்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டதால் சீட் இ்ல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் செல்ல பயணிகள் பெரும் ஏமாற்றமும், கவலையும் அடைந்தனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமானங்களும், தூத்துக்குடிக்கு 3 விமானங்களும், திருச்சிக்கு 4 விமானங்களும், கோவைக்கு 6 விமானங்களும் இயக்கப்படுகிறது. இந்த விமானங்கள் சிலவற்றில் நேற்று டிக்கெட்டுகள் முழுவதும் நிரம்பி விட்டன. சில விமானங்களில் ஒரு சில டிக்கெட்டுகள் மட்டும் இருந்தன. இந்த விமானங்களில் சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட பல மடங்கு உயர்ந்து இருந்தது.
பயணிகள் கூட்டத்தை சமாளிப்பதற்காக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மதுரைக்கு 3 விமானங்களும், தூத்துக்குடிக்கு 2 விமானங்களும், திருச்சிக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகிறது.
இந்த விமானங்களிலும் இன்று(சனிக்கிழமை) பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டன. ஒரு சில விமானங்களில் மட்டும் சில இருக்கைகள் உள்ளன. இந்த விமானங்களில் சென்னையில் இருந்து செல்லும் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் பண்டிகை காலங்களில் விமான டிக்கெட்டுகளை கடைசி நேரத்தில் எடுக்க முயற்சிப்பதால் கட்டணங்கள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் விமான நிறுவனங்கள் கூடுதலாக விமானங்களை இயக்குவதால் விமானத்தில் சீட் இல்லை என்ற நிலை ஏற்படாது.
கடந்த தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் மதுரை, தூத்துக்குடி, கோவை, திருவனந்தபுரம், கொச்சி, மும்பை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கூடுதல் விமான சேவைகளை இயக்கினார்கள்.
ஆனால் இந்த முறை விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை இயக்கவில்லை. அதற்கு பதிலாக, பெங்களூரு வழியாக சுற்று வழித்தடத்தில் இயக்குகின்றனர். இதனால் பயண நேரம் அதிகமாவதுடன், டிக்கெட் கட்டணமும் பல மடங்கு அதிகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.