ரூ.11 லட்சத்தில் மிதவை பாலம்
ஊட்டி படகு இல்லத்தில் ரூ.11 லட்சத்தில் மிதவை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நடந்து சென்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி,
ஊட்டி படகு இல்லத்தில் ரூ.11 லட்சத்தில் மிதவை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நடந்து சென்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி படகு இல்லம்
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தபடியாக ஊட்டி படகு இல்லத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
ஊட்டி ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. பரந்து விரிந்த ஏரி, சுற்றிலும் பசுமையான மரங்கள், அரிய வகை பறவைகள் என இயற்கை அழகை ரசித்த படி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
மிதவை பாலம்
ஊட்டி படகு இல்லத்தில் 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 104 மிதி படகுகள் உள்ளன. இங்கு வார நாட்களில் தினமும் 5 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர். ஏரியை ரசிக்கும் வகையில் காட்சி மாடங்கள் உள்ளன. ஏரியின் நடுவே நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவருகிறது. மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவு செய்து உள்ளது.
இந்தநிலையில் தற்போது ஊட்டி படகு இல்லத்தில் ரூ.11 லட்சம் செலவில் மிதவை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. புளோட்டிங் ஜெட்டி எனப்படும் மிதவை பாலம் செவ்வக வடிவில் (பிளாஸ்டிக் கேன் போன்று) சிறு, சிறு அமைப்பாக சேர்ந்து ஒரு சேர ஏரியில் மிதக்கிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிதவை பாலத்தில் நடந்து சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் அதில் நடந்து சென்று படகு சவாரிக்கு செல்கின்றனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது.