கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியை மழை வெள்ளம் சூழ்ந்தது-விடுமுறை விடப்பட்டது
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் மழை வெள்ளம் புகுந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
நாமக்கல்:
கனமழை
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனிடையே கொக்கராயன்பேட்டையில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல் வெளிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது.
மேலும் கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மழை வெள்ளம் புகுந்தது. பள்ளி வளாகத்தில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பள்ளியில் தண்ணீர் புகாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளியை ஒட்டி உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது. இதன் வழியாக பள்ளியில் தேங்கி நின்ற தண்ணீர் மெல்ல மெல்ல வெளியேற தொடங்கியது.
மழை அளவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
ராசிபுரம்-200, புதுச்சத்திரம்-54, நாமக்கல் -50, கலெக்டர் அலுவலகம் - 43, சேந்தமங்கலம்-39, எருமப்பட்டி-35, கொல்லிமலை-30, மோகனூர்-24, குமாரபாளையம்-22, திருச்செங்கோடு-21, பரமத்திவேலூர்-20, மங்களபுரம்-16.