வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x

காரிமங்கலம் பகுதியில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் பகுதியில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கனமழை

காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டி ஏரி, குட்டூர் ஏரி மற்றும் குட்டைகள் நிரம்பின. இதனால் ஏரி, குட்டைகளில் இருந்து அதிகமாக உபரிநீர் வெளியேறியது. இதன் காரணமாக காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் நகர், கைலாசகவுண்டர் கொட்டாய், ஆர்.எஸ்.வி.முருக்கம்பட்டி சாலை, ஏரியின் கீழூர், அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். தொடர்ந்து வணிக நிறுவனங்கள், நார் தொழிற்சாலைகளில் மழைநீர் புகுந்தது. இதனால் எந்திரங்கள், தென்னை நார் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. மேலும் வீடுகளில் இருந்த பொருட்கள் நனைந்து சேதமடைந்தன. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கோழிகள் செத்தன

அதன்பேரில் தாசில்தார் சுகுமார், பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் டார்த்தி மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தோண்டி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.இதேபோல் முக்குலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கோழி பண்ணைக்குள் மழைநீர் புகுந்தது. இதில் 2000-க்கும் மேற்பட்ட கோழிகள் செத்தன.


Next Story