வெள்ளப்பெருக்கு எதிரொலி:சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இந்த அருவி சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு அருகே உள்ள சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலை மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக நேற்று முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனர். இதற்கிடையே நேற்று காலை சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் குளிப்பதற்கு வந்தனர். அப்போது கன மழை பெய்தது. இதனால் கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரி பிச்சைமணி தலைமையில் வனத்துறையினர் பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். மழை பெய்து வருவதால் அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.