திருவண்ணாமலை அருகே துரிஞ்சலாற்றில் வெள்ளப்பெருக்கு
திருவண்ணாமலை அருகே துரிஞ்சலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
அந்த வகையில் திருவண்ணாமலையை அடுத்த சம்மந்தனூர் கிராமம் அருகே செல்லும் துரிஞ்சலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் அதிகாரிகள் சாலையின் நடுவே முள்வேலி அமைத்து அவ்வழியாக வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
துரிஞ்சலாற்று பாலம் வழியாக சம்பந்தனுர், ஆரஞ்சு, குமரக்கொடி, நல்லவன்பாளையம், பொலக்குணம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவது வழக்கம். தற்போது துரிஞ்சலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்துக்கு மேல் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தரைப்பாலத்திற்கு மேல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் 'செல்பி' எடுத்து விளையாடினர்.