கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு; படகு சவாரி நிறுத்தம்


கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு; படகு சவாரி நிறுத்தம்
x

ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ேமலும் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ேமலும் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

கனமழை பெய்தது

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னர் மப்பும், மந்தாரமுமாக மாறியது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. பிங்கர்போஸ்ட், தலைகுந்தா, சூட்டிங்மட்டம், தொட்டபெட்டா, லவ்டேல், எம்.பாலாடா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக வழக்கத்தை விட தண்ணீர் அதிகமாக சென்றது. ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் ஊட்டி-காந்தல் இடையே செல்லும் நகர பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

படகு சவாரி நிறுத்தம்

மேலும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பூங்கா மற்றும் உணவு விடுதிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. கனமழை காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் மிதி படகுகள், துடுப்பு படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேற்கூரையுடன் கூடிய மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கி நின்றதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேரிங்கிராசில் கட்டிடம் கட்ட மண் அகற்றப்பட்ட இடத்தில், மண் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் எம்.பாலாடாவில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. ஊட்டியில் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Next Story