ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் பூ, பழங்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதேபோல் மார்க்கெட்டில் 35 டன் பூக்கள் விற்பனையானது.
ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூ, பழங்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதேபோல் மார்க்கெட்டில் 35 டன் பூக்கள் விற்பனையானது.
திருப்பூர்
ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூ, பழங்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. இதேபோல் மார்க்கெட்டில் 35 டன் பூக்கள் விற்பனையானது.
மக்கள் கூட்டம்
ஆயுத பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடுகிறது. பூஜைக்கு தேவையான பூஜை சாமான்கள் மற்றும் பூ, பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக நேற்று திருப்பூரில் உள்ள மார்க்கெட் மற்றும் கடை வீதிகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்தனர். இதேபோல், மளிகை பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்டவை வாங்குவதற்காகவும் பொதுமக்கள் அதிகம் வந்ததால் மாநகர பகுதியில் வாகனப்போக்குவரத்து அதிக அளவில் இருந்தது. இதனால் மாநகரின் முக்கிய ரோடுகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட்டிற்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்ததால் வாகனங்களுக்கு மத்தியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதில் பொதுமக்களின் வாகனங்கள் மட்டுமின்றி, மார்க்கெட்டிற்கு பூ, பழம், காய்கறி உள்ளிட்டவற்றை ஏற்றிய வாகனங்களும் அடிக்கடி வந்த வண்ணம் இருந்தன. ஆயுத பூஜைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செவ்வந்தி பூ நேற்று 25 டன் அளவிற்கு மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விலை கிடு, கிடு உயர்வு
இந்த நிலையில் பூ, பழம் மற்றும் காய்கறிகளின் விலை நேற்று கிடு, கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ அதிகபட்சமாக ரூ.1200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், முல்லை ரூ.800, ஜாதிமல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, அரளிப்பூ ரூ.400, பட்டு பூ ரூ.80, சம்பங்கி ரூ.300, செண்டு மல்லி ரூ.80 ஒரு தாமரை பூ ரூ.10 முதல் ரூ.30 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று ஒரு நாளில் சுமார் 35 டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் பழம் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகமாக இருந்தது.
ஒரு கிலோ ஆப்பிள் ரூ.260, ஆரஞ்சு ரூ.240, மாதுளை ரூ.280, சாத்துக்குடி ரூ.100, கொய்யாப்பழம் ரூ.80, பச்சை திராட்சை ரூ.240, கருப்பு திராட்சை ரூ.160, அண்ணாசி பழம் ரூ.80, வாழைப்பழம் ரூ.60 முதல் ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி பழம் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.30, வெண்டைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.60, பீட்ரூட் ரூ.100, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.110 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக எலுமிச்சம் பழம் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
களை கட்டிய வீதிகள்
இதேபோல் பூஜைக்கு தேவையான வாழைக்கன்றுகள், மாவிலை, அலங்கார தோரணங்கள், செவ்வந்தி பூ மாலைகள், கரும்பு, அவல், பொரி, கடலை ஆகியவை அவினாசி ரோடு, பி.என்.ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, குமரன் ரோடு,மங்கலம் ரோடு, காங்கேயம் ரோடு உள்ளிட்ட மாநகரின் முக்கிய ரோடுகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்ததால் வீதிகள் களை கட்டியது. இதில் ஒரு ஜோடி வாழைக்கன்று ரூ.30 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. மாவிலை கட்டு அதிகபட்சம் ரூ.20, ஒரு ஜோடி கரும்பு ரூ.100 முதல் ரூ.150, வெண்பூசணி கிலோ ரூ.40, ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இதில் கரும்பு, வாழைக்கன்று உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வீட்டிற்கு வாங்கி சென்ற நிலையில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பனியன் நிறுவனங்களுக்கு பலர் கட்டு, கட்டாக வாகனங்களில் வாங்கி சென்றனர். இதேபோல், மாநகர பகுதியில் குருத்தோலை தோரணம், சாமி படங்கள், திருஷ்டி பொருட்கள் ஆகியவையும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. காலை முதல் அனைத்து வகை பூஜை பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்த நிலையில் நேரம் செல்ல, செல்ல கடைசி நேர பரபரப்பில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் படையெடுத்ததால் மாநகரில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
------