அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
அப்துல்கலாமின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பு துஆ பிரார்த்தனை நடந்தது. அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் குடும்பத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்,
அப்துல்கலாமின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பு துஆ பிரார்த்தனை நடந்தது. அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் குடும்பத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பிறந்த நாள்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரம் பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று சிறப்பு துஆ பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், மகன் ஜெய்னுலாபுதீன், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம் ஜமாத் தலைவர் ஆவுலன்சாரி மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், தாசில்தார் அப்துல் ஜபார், கலாம் மணிமண்டப பொறுப்பாளர் அன்பழகன், கலாமின் நெருங்கிய நண்பர் மருத்துவர் டாக்டர் விஜயராகவன், நகைச்சுவை நடிகர் தாமு மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் கலாமின் குடும்பத்தினர் கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் அப்துல் கலாமின் நினைவிடத்தில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் ஜி.முனியசாமி, முருகன், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் டேவிட் அண்ணாதுரை, தேர்தல் பிரிவு மாநில செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர்.
மலர் தூவி மரியாதை
அதுபோல் கலாமின் 91-வது பிறந்த நாளை முன்னிட்டு கலாமின் நினைவிடத்தில் நேற்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராமேசுவரம் வந்த ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதுபோல் கலாமின் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாமின் முழு உருவ சிலை முன்பு நின்றும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர்.