சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் விழாபெண்கள்- குழந்தைகள் வனப்பகுதிக்கு சென்று பூ பறித்தனர்
சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் விழாவையொட்டி, அங்குள்ள வனப்பகுதிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று பூ பறித்து வந்தனர்.
சென்னிமலை
சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் விழாவையொட்டி, அங்குள்ள வனப்பகுதிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று பூ பறித்து வந்தனர்.
பூப்பறிக்கும் திருவிழா
சென்னிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலுக்கு மறுநாள் பூப்பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தை பொங்கலுக்கு மறு நாளான நேற்று சென்னிமலை நகர பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் காமராஜ் நகர் வனப்பகுதிக்கு பூப்பறிக்க சென்றனர்.
பூப்பறிக்க சென்றனர்
மேலும் சென்னிமலை அருகே தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீட்டு ஆண்களுடன் அங்குள்ள வனப்பகுதிக்கு பூப்பறிக்க சென்றனர்.
இதற்காக நேற்று காலை 10 மணி அளவில் தங்களது வீடுகளில் இருந்து கரும்பு மற்றும் இனிப்பு, கார வகைகளை எடுத்து கொண்டு சென்றனர். அங்கு அனைவரும் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த தின் பண்டங்களை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். பின்னர் மாலை 3 மணி அளவில் அங்கிருந்து பாட்டு பாடியபடி தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
பொங்கல் வைத்து வழிபாடு
இதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் கோலமிட்டு ஏற்கனவே கடந்த 1 மாதமாக சாணத்தால் பிடித்து வைத்திருந்த பிள்ளையார் மற்றும் கரும்பு, மஞ்சள் செடி ஆகியவற்றை வைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) சாணத்தாலான பிள்ளையார்களை தங்களது வீடு அருகிலேயே உள்ள நீர்நிலைகளில் விடுகிறார்கள். மேலும் நேற்று உழவர் தினம் என்பதால் சென்னிமலை பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி இரவு மாட்டு கொட்டகையில் பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.