பூக்கள் விலை உயர்வு


பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:45 PM GMT)

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1400-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1400-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டம் காவல்கிணறு, ஆவரைக்குளம் ஆகிய பகுதியில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

அவ்வாறு வரும் பூக்களை வாங்க அதிகாலையிலேயே குமரி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். மேலும் வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மல்லிகை ரூ.1400-க்கு...

நேற்று முன்தினம் கிலோ ரூ.600-க்கு விற்பனையான மல்லிகை பூ, நேற்று ரூ.800 உயர்ந்து ரூ.1400-க்கு விற்பனை ஆனது. இதுபோல், பிச்சி ரூ.750-ல் இருந்து ரூ.1000 ஆகவும், முல்லை ரூ.700-ல் இருந்து ரூ.950 ஆகவும் விற்பனையானது.

விலை உயர்வு குறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், "தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. மேலும், நாளை(இன்று) முகூர்த்தநாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால், வரத்து குறைவாக இருந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கியதால் விலை உயர்ந்து இருக்கிறது" என்றார்.

விலை விவரம்

தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ ரூ.190, வாடாமல்லி ரூ.80, சிவப்புகேந்தி ரூ.80, சம்பங்கி ரூ.400, ரோஜா (100 எண்ணம்) ரூ.20, பட்டன்ரோஸ் ரூ.160, துளசி ரூ.60, தாமரை (100 எண்ணம்) ரூ.1500, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.60, கொழுந்து ரூ.90, மருக்கொழுந்து (கட்டு) ரூ.90, மஞ்சள்கேந்தி ரூ.80, மஞ்சள் சிவந்தி ரூ.100, வெள்ளை சிவந்தி ரூ.80, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.400 என விற்பனையானது.


Next Story