கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்வு
ஆயுத பூஜையையொட்டி கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோத்தகிரி,
ஆயுத பூஜையையொட்டி கோத்தகிரியில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுத பூஜை
கோத்தகிரி பூ மாா்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை பூக்கள் தினமும் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. ஓசூா், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து சாமந்தி, ரோஜா பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இதேபோல கோவையின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கோழிக்கொண்டை, வாடாமல்லி, கனகாம்பரம், அரளி பூக்கள் விற்பனைக்கு வருகிறது.
இந்தநிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி கோத்தகிரிக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளது. மைசூருவில் இருந்து ஏலம் எடுத்து சரக்கு வாகனங்கள் மூலம் கோத்தகிரிக்கு வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். ஆயுத பூஜையையொட்டி சிறப்பு பூஜை செய்வதில் பூக்கள் முக்கிய இடம்பெறுகிறது. மேலும் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
பூக்கள் விலை உயர்வு
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, கர்நாடகா மாநிலத்தில் தசரா பண்டிகை மற்றும் தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு முழம் சாமந்தி பூ ரூ.50-க்கு விற்பனை செய்தோம். ஆனால், இந்த ஆண்டு ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ சாமந்தி பூ ரூ.60-க்கு விற்பனையானது. தற்போது ரூ.120-க்கு விற்பனை ஆகிறது. ரூ.120-க்கு விற்ற அரளிப்பூ ரூ.440 ஆகவும், மல்லிகை பூ கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், சம்மங்கி பூ ரூ.50-ல் இருந்து ரூ.300 ஆகவும், ரோஜா பூ ரூ.60-ல் இருந்து ரூ.300 ஆகவும், செண்டு மல்லி ரூ.50-ல் இருந்து ரூ.140 ஆகவும் விலை உயர்ந்து உள்ளது என்றனர்.