சேலத்தில் பூக்கள் விலை உயர்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ விற்பனை மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் பூக்கும் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். குறிப்பாக ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று பூக்கள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக குண்டுமல்லி, சன்னமல்லி ஆகிய பூக்கள் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் குண்டுமல்லி, சன்னமல்லி ஆகிய பூக்கள் கிலோ தலா ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காக்கட்டான்
மார்க்கெட்டில் மற்ற பூக்களும் நேற்று முன்தினத்தை விட விலை உயர்ந்து காணப்பட்டது. ஜாதிமல்லி கிலோ ரூ.360-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும், கலர் காக்கட்டான் ரூ.500-க்கும், அரளி ரூ.200-க்கும், வெள்ளி அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.160-க்கும், செவ்வரளி ரூ.220-க்கும், ஐ.செவ்வரளி 200-க்கும் விற்பனையானது.
மேலும் நந்திவட்டம் கிலோ ரூ.120-க்கும், சம்பங்கி மற்றும் சாதா சம்பங்கி ஆகியவை தலா ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூ மார்க்கெட்டுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.