பூக்கள் விலை பாதியாக குறைந்தது
திருவாரூரில் பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. 1 கிலோ ரூ.1200-க்கு விற்ற மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருவாரூரில் பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. 1 கிலோ ரூ.1200-க்கு விற்ற மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விற்பனை அதிகம்
திருவாரூரில் உள்ள கடைவீதியில் ஏராளமான பூ கடைகள் உள்ளன. இந்த பூ மார்க்கெட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும். அப்போது அதற்கேற்றார்போல் பூக்களின் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும்.
விலை பாதியாக குறைந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் தைப்பூசம் விழா என்பதால் திருவாரூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது தைப்பூசம் முடிந்து விட்டதாலும், முகூர்த்த நாள் இல்லாததாலும் நேற்று பூக்கள் விலை பாதியாக குறைந்தது.
அதன்படி திருவாரூர் பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ரூ.600-க்கு விற்பனையானது. மேலும் ரூ.1000-க்கு விற்பனையான ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.500-க்கு விற்கப்பட்டது.ரூ.800-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்பனையானது. மேலும் செவ்வந்தி ரூ.80-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஸ் ரூ.90-க்கும் விற்கப்பட்டது.
தேவை அதிகம் இருந்தது
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நேற்று முன்தினம் தைப்பூச விழா என்பதாலும், சுப முகூர்த்த நாளாக இருந்ததாலும், பூக்களின் தேவை அதிகம் இருந்தது.
இதன் காரணமாக பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. இன்று (அதாவதுநேற்று) முதல் தேய்பிறை தொடங்குவதால் பூக்கள் விலை குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.