டிராக்டர் மூலம் பூச்செடிகளை உழுது வயலுக்கு உரமாக்கிய விவசாயி


டிராக்டர் மூலம் பூச்செடிகளை உழுது வயலுக்கு உரமாக்கிய விவசாயி
x

பனியின் தாக்கத்தினால் பூக்கள் கருகியதால் டிராக்டர் மூலம் பூச்செடிகளையும் உழுது வயலுக்கு உரமாக்கிய விவசாயி, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

பனியின் தாக்கத்தினால் பூக்கள் கருகியதால் டிராக்டர் மூலம் பூச்செடிகளையும் உழுது வயலுக்கு உரமாக்கிய விவசாயி, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

செண்டிப்பூக்கள்

தஞ்சை மாவட்டத்தில் வல்லம், திருக்கானூர்பட்டி, மருங்குளம், குருங்குளம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் செண்டிப்பூக்கள் அதிகஅளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பூக்கும் பூக்கள் அனைத்தும் தஞ்சை பூச்சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. செண்டிப்பூக்களுக்கு குறிப்பிட்ட சீசன் என்பது கிடையாது. இவை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் பூவாகும். நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 50 நாட்களுக்குள் பூக்கள் அறுவடைக்கு தயாராகிவிடும்.வாசனையில்லா பூவாக உள்ள செண்டிப்பூக்கள் பெரும்பாலும் இறந்தவர்களின் இறுதி அஞ்சலிக்காக மாலையாக கட்டி பயன்படுத்தப்படுவது வழக்கம். தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த பனியின் தாக்கத்தினால் பூக்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளிலேயே பூக்கள் கருகிவிடுவதால் பூச்சந்தைக்கு விற்பனைக்காக குறைந்தஅளவே பூக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

உழுது உரமாக்கிய விவசாயி

அதேபோல் தஞ்சை சுற்றுப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செண்டிப்பூக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களும் கருகி வருகிறது. பூக்கள் கருகுவதால் போதிய விலையும் கிடைப்பதில்லை. திருக்கானூர்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 1½ ஏக்கர் நிலத்தில் செண்டிப்பூக்கள் சாகுபடி செய்து இருந்தார். இந்த செண்டிப்பூக்கள் பனியின் தாக்கத்தினால் கருகியது.இதனால் வேதனை அடைந்த அந்த விவசாயி நேற்று பூக்களையும், பூச்செடிகளையும் அழிக்க முடிவு செய்தார். அப்படி அழிக்கப்படும் பூக்கள், செடிகளை உரமாக பயன்படுத்தவும் முடிவு செய்தார். அதன்படி அந்த விவசாயி நேற்று செண்டிப்பூக்கள் சாகுபடி செய்த வயலில் டிராக்டரை இறக்கி, உழுது அந்த பூக்களையும், செடிகளையும் வயலுக்கு உரமாக ஆக்கினார்.

ரூ.1 லட்சம் இழப்பு

இது குறித்து விவசாயி ரோஸ் கூறும்போது, நாங்கள் ஆண்டுதோறும் செண்டிப்பூக்கள் சாகுபடி செய்வதைபோல் இந்த ஆண்டும் செண்டிப்பூக்களை சாகுபடி செய்திருந்தோம். பூக்கள் நன்றாக வளர்ந்து இருந்த நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பூக்கள் கருக தொடங்கியது. பூக்கள் கருகுவதால் அதை பறித்து விற்பனை செய்தாலும் போதிய வருவாயும் கிடைக்காது. பூக்களை பறிப்பதற்கு கூலி தான் அதிகமாகும். அதனால் தான் வயலுக்காவது உரமாகட்டும் என நினைத்து பூக்களையும், செடிகளையும் அப்படியே டிராக்டரால் உழுது உரமாக்கியுள்ளோம். இதனால் எங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.


Next Story