ஓட்டப்பிடாரம்உலகாண்டஈஸ்வரி அம்பாள்கோவில் பங்குனி திருவிழா
ஓட்டப்பிடாரம் உலகாண்டஈஸ்வரி அம்பாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் உலகாண்டஈஸ்வரி அம்பாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.
பங்குனி திருவிழா
ஓட்டப்பிடாரம் உலகாண்டஈஸ்வரி அம்பாள் கோவில் பங்குனி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 10-ந் தேதி இரவு ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
சப்பரத்தில் வீதிஉலா
காலையில் ஏராளமான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்பாளுக்கு 101 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்கார பூஜை, படைப்பு பூஜை, சாம பூஜைகள் நடந்தன. இரவு 12 மணிக்கு அம்பாள் அலங்கார வெண்கல சப்பரத்தில் வீதி உலா நடந்தது. பக்தர்கள் சப்பரத்தை ஊரின் முக்கிய வீதி வழியாக வடம் பிடித்து இழுத்து சென்றனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு சப்பரம் நிலையை அடைந்தது. ஓட்டப்பிடாரம் சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பால்குட ஊர்வலம்
நேற்று ஓட்டப்பிடாரம், மேட்டூர், வடக்குப் பரும்பூர், தெற்கு பரும்பூர் மற்றும் முப்பிலிவெட்டி ஆகிய கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
விழாவில் ஓட்டப்பிடாரம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் போது கரகாட்டம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.