காரைக்குடியில் வியாபாரியை காரில் கடத்தி ரூ.3 கோடி, 1½ கிலோ தங்கம் பறிப்பு போலீஸ் போல் நடித்த கும்பலுக்கு வலைவீச்சு
காரைக்குடியில் ரூ.3 கோடி, 1½ கிலோ தங்கத்தை போலீஸ் போல் நடித்து பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்குடி,
காரைக்குடியில் ரூ.3 கோடி, 1½ கிலோ தங்கத்தை போலீஸ் போல் நடித்து பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தங்க பிஸ்கெட்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி. தெரு சோமு பிள்ளை சந்து பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 40). காரைக்குடியில் உள்ள நகைக்கடைகளில் தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை பெற்று கொண்டு சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு சென்று அங்கு விற்றும், புதிய நகைகளை செய்தும், அந்த நகைகளை காரைக்குடி நகை வியாபாரிகளுக்கு கொண்டு வந்து கொடுப்பதும் வழக்கம். கமிஷன் அடிப்படையில் செயல்படும் இது போன்ற நபர்களுக்கு காரைக்குடி நகை வியாபாரிகள் வட்டாரத்தில் குருவியார் என்று பெயர் உண்டு.
சம்பவத்தன்று ரவிச்சந்திரன் காரைக்குடியில் உள்ள பல்வேறு நகை வியாபாரிகளிடம் தங்க கட்டிகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு சென்னை சவுகார்பேட்டையில் உள்ள அவர்களது வாடிக்கையாளர்களிடம் விற்றுள்ளார். பின்னர் அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு காரைக்குடி நகை வியாபாரிகளுக்காக நகைகளை ஆர்டர் செய்து அதனையும் பெற்றுக்கொண்டு காரைக்குடி திரும்பினார்.
காரில் கடத்தல்
சென்னையிலிருந்து காரைக்குடிக்கு ஆம்னி பஸ்சில் திரும்பிய ரவிச்சந்திரன் 1½ கிலோ நகைகள் மற்றும் ரூ.3 கோடி ரொக்கத்தோடு அதிகாலை காரைக்குடி கழனிவாசல் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது வெள்ளை நிற சொகுசு காரில் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்த 6 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் தங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் என கூறினர். பின்னர் ரவிச்சந்திரனிடம், நீங்கள் விசாரணைக்காக புதுக்கோட்டை போலீஸ் நிலையம் வரவேண்டும் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக நகைகள் மற்றும் பணப்பையோடு தங்களது காரில் ஏற்றி கடத்தினர். இந்த கார் புதுக்கோட்டை நோக்கி சென்றது.
புலிவலம் என்ற இடம் அருகே சென்ற போது அதற்கு அடுத்த இடமான டோல்கேட் வழியாக சென்றால் கண்காணிப்பு கேமராவில் சிக்கி விடுவோம் என கருதி ரவிச்சந்திரனிடம் இருந்த ரூ.3 கோடி மற்றும் 1½ கிலோ தங்கத்தை பறித்த கும்பல் அவரை தாக்கி கீழே இறக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
பரபரப்பு
இதுகுறித்து ரவிச்சந்திரன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதேபோல் அவரிடம் தங்க கட்டிகள் மற்றும் பணம் கொடுத்தனுப்பிய காரைக்குடி நகை வியாபாரிகள் சிலரும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், 3 தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார். தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் பகுதி வரையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மற்றொரு பிரிவினர் ரவிச்சந்திரன் வந்த ஆம்னி பஸ்சில் பயணித்தோர் பட்டியல் அவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ரவிச்சந்திரனின் செல்போன் தொடர்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் காரைக்குடி நகைக்கடைகளை தேர்வு செய்து அவர்களது கடைகளின் வரவு, செலவு கணக்குகள் குறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் காரைக்குடி நகை வியாபாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.