முதல்-அமைச்சர் வருகை..! திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரதீப் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) திருச்சி செல்கிறார்.
இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.