உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை பின்பற்றிஅங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரருக்கு துப்பாக்கி லைசென்சு வழங்கலாம்- கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரருக்கு துப்பாக்கி லைசென்சு வழங்கலாம் என்று கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த வாட்சன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மகன் ஆன்ட்ரிக் டெலினோ. இவர், துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று, ஜூனியர் பிரிவில் பதக்கம் பெற்று உள்ளார். இதுபோல பல்வேறு துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று சாதனைகளை படைத்து உள்ளார். இதனால் அவர், ஆர்வம் உள்ள துப்பாக்கி சுடும் வீரராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மாநில போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெறுவதற்கு வசதியாக அவருக்கு துப்பாக்கி லைசென்சு கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் மாவட்ட கலெக்டர், அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார். ஆர்வம் உள்ள துப்பாக்கி சுடும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி லைசென்சுக்கு விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த வகையில் என் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு துப்பாக்கி லைசென்சு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.முடிவில், மனுதாரர் மகனின் துப்பாக்கி லைசென்சு விண்ணப்பத்தை நிராகரித்த மாவட்ட கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கை குறித்த மனுவை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.அந்த மனுவை கலெக்டர் பரிசீலித்து, இதுசம்பந்தமான உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையையும் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் மனுதாரரின் மகனிடம் உரிய நிபந்தனைகளை உறுதி செய்வது தொடர்பான பிரமாணப்பத்திரத்தை பெற்றுக் கொண்டு, துப்பாக்கி லைசென்சு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.