முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை சிறப்பு செயலாளர் ஆய்வு


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை சிறப்பு செயலாளர் ஆய்வு
x

குண்டடம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு சிறப்பு செயலாளர் கருணாகரன் ஆய்வு செய்தார்.

திருப்பூர்


காலை உணவு திட்டம் ஆய்வு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலாளரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான கருணாகரன் நேற்று குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு குறித்து கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் கூறியதாவது:-

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் நேரடியாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குண்டடம் ஒன்றியம் ஜோதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேடபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. சமையல் கூடங்கள் பார்வையிடப்பட்டது.

அரசின் திட்டங்கள்

ஜோதியம்பட்டி ஊராட்சியில் ரூ.6 லட்சத்தில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் மற்றும் தாராபுரம் நகராட்சியில் ரூ.46 லட்சத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதிய பூங்கா கட்டுமான பணி, தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் குறித்தும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஆய்வு நடந்தது. அரசின் திட்டங்களை காலதாமதமின்றி விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிவசண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story