உணவுப்பொருள் வழங்கல் குறை தீர்வு நாள் முகாம்
போளூர் அருகே உணவுப்பொருள் வழங்கல் குறை தீர்வு நாள் முகாம் நடந்தது.
போளூர்
சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவுபடி, போளூர் தாலுகாவில் உள்ள திருமலை கிராமத்தில் இன்று சிறப்பு குறைத்தீர்வு நாள் முகாம் நடைபெற்றது.
தாலுகா விநியோக அலுவலர் தேவி தலைமை தாங்கினார். வட்ட பொறியாளர் என்.செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சத்தீஜா வரவேற்றார்.
முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் போன்ற கோரிக்கை 56 மனுக்களை கிராம மக்கள் வழங்கினார்கள்.
இதுகுறித்து தாலுகா வினியோக அலுவலர் தேவி கூறுகையில், அரசின் உத்தரவுப்படி மக்களை தேடி அரசு அதிகாரிகள் நேரில் வந்து குறைகள் கேட்டறிந்து, அவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
போளூர் தாலுகாவில் 138 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளில் பிரதி மாதம் 2-வது சனிக்கிழமைதோறும் குறை தீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் உடனுக்குடன் குறைகள் சரி செய்யப்படுகிறது. இதுவரை 8 இடங்களில் இது போன்ற முகாம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.