உணவு வினியோக நிறுவனங்கள்குற்ற பின்னணி உள்ளவர்களை பணியில் அமர்த்த கூடாது


உணவு வினியோக நிறுவனங்கள்குற்ற பின்னணி உள்ளவர்களை பணியில் அமர்த்த கூடாது
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் உணவு வினியோக நிறுவனங்கள் குற்ற பின்னணி உள்ளவர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று கலந்துரையாடல் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

ஆன்லைன் உணவு வினியோக நிறுவனங்கள் குற்ற பின்னணி உள்ளவர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று கலந்துரையாடல் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

நில புரோக்கர் கொலை

நாகர்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலப்புரோக்கர் சேவியர் பாபு (வயது57) குத்திக் கொலை செய்யப்பட்டார். அவருடன் ஸ்கூட்டரில் சென்ற நண்பரான செல்வராஜ் (48) என்பவரும் கத்திக்குத்தில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது நாகர்கோவில் நேசமணிநகர் பெஞ்சமின் தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி சுபின் (33) என்பது தெரிய வந்தது. இவர் ஒரு தனியார் ஆன்லைன் உணவு வினியோக நிறுவனத்தில் உணவை டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தார். இதையடுத்து சுபினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கலந்துரையாடல்

இந்த சம்பவத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் தனியார் ஆன்லைன் உணவு வினியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனியார் ஆன்லைன் உணவு வினியோக நிறுவன ஊழியர்கள் மற்றும் போலீசார் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

தடையில்லா சான்று

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசியதாவது:-

உணவு வினியோகம் செய்யும் ஊழியர்களை பணிக்கு சேர்க்கும்போது அவர்களின் குற்ற பின்னணி விசாரிக்கப்பட வேண்டும். போலீசில் அவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை என்பதற்கான தடையில்லாச் சான்று பெற்று பணியில் அமர்த்த வேண்டும்.

ஊழியர்கள் உணவு கொண்டு செல்லும் போது ஏதாவது சட்ட விரோதமான குற்ற சம்பவங்களை கண்டால் உடனடியாக மாவட்ட போலீசின் அவசர அழைப்பு எண்ணான 100 என்ற எண்ணுக்கோ, 7010363173 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கோ அல்லது மாவட்ட போலீஸ் அலுவலகத்தால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் இரவு ரோந்து அதிகாரிகளின் எண்ணுக்கோ தகவல் அளிக்கலாம். குற்றங்களை தடுப்பதில் மாவட்ட காவல்துறைக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மெதுவாக செல்ல வேண்டும்

ஆன்லைன் உணவு வினியோக நிறுவன ஊழியர்கள் வாகனத்தில் செல்லும் போது உணவை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சாலையில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செல்ல கூடாது. சாலையில் மெதுவாக வாகனத்தை இயக்க வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசினார்.

பின்னர் ஆன்லைன் உணவு வினியோக நிறுவன ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


Next Story