வேடசந்தூர் அருகே மாணவ-மாணவிகள் மயக்கம்; தனியார் கல்லூரி விடுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
வேடசந்தூர் அருகே மாணவ-மாணவிகள் மயங்கி விழுந்த விவகாரம் தொடர்பாக தனியார் கல்லூரி விடுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேடசந்தூர் அருகே சேணன்கோட்டையில் தனியார் வேளாண்மை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் தங்கி 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நித்யகுமார் (18), சோபனா (18), கோகுல்நந்தினி (18), நிவேதா (18), சங்கரி (19), தமிழரசி (19) உள்பட 13 பேர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் 13 பேரும் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று 13 பேரும் மீண்டும் கல்லுரிக்கு திரும்பினார்கள். இதற்கிடையே விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, காலை உணவு வழங்க தாமதம் ஏற்பட்டதால் பசியால் மயக்கமடைந்ததாக மாணவ-மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரமோகன் தலைமையிலான குழுவினர் தனியார் கல்லூரி விடுதிக்கு சென்று உணவை ஆய்வு செய்தனர். மேலும் உணவு, குடிநீர், உளுந்தம்பருப்பு ஆகிய பொருட்களை ஆய்விற்காக எடுத்துச்சென்றனர்.
இதேபோல் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் கொண்ட குழுவினர் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளிடம் நேற்று தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, தற்போது விடுதி சமையல்காரர் மாற்றப்பட்டு, வேறொருவர் சமையலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தங்களுக்கு தரமான உணவு வழங்குவதாக போலீசாரிடம் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.