உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கி விழிப்புணர்வு கையேட்டை வழங்கி பேசினார்.
அப்போது, ஸ்வீட் ஸ்டால்கள் மற்றும் பேக்கரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை மட்டும் 100 பி.பி.எம். என்ற அளவுக்குள் மட்டும் பயன்படுத்த வேண்டும், ஒருமுறை கொதிக்க வைத்து, ஆறிய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது, ஈக்கள் மொய்க்காதவாறு உணவு பொருட்களை பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும், சுகாதாரமான முறையில் பலகாரங்கள் தயாரிக்க வேண்டும். விதியை மீறும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், சிவக்குமார் மற்றும் ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.