குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை


குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை
x

வேலூரில் உள்ள குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர்

அதிகாரிகள் திடீர் சோதனை

வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கெள்ள பொதுமக்கள் அனைவரும் குளிர்பானம் மற்றும் பழச்சாறு கடைகளுக்கு சென்று குளிர்பானங்களை குடித்து தாகத்தை தணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் உள்ள பழக்கடைகள், குளிர்பான கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு புகார்கள் சென்றது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி ஆகியோர் நேற்று வேலூரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு ஆய்வு செய்தனர்.

வேலூர்- ஆற்காடு சாலை, காந்தி ரோடு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்த குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளில் திடீரென சோதனை செய்தனர். அப்போது 2 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

அறிவுரைகள்

அந்த கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் 7 கிலோ சுகாதாரமற்ற பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கடைக்காரர்களிடம் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு உகந்த ஐஸ்கட்டிகளை பயன்படுத்தி குளிர்பானங்கள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். தரமான பழங்கள் பழச்சாறுக்கு பயன்படுத்த வேண்டும். குளிர்பானங்கள் விற்பனை செய்யும் போது அவை காலாவதியாகி விட்டதா? என்பதை பார்த்து விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினர்.


Next Story