கேக் உள்ளே பல்செட் கிடந்த விவகாரம்:விழுப்புரம் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைசுகாதாரமற்ற கேக், பிரட் வகைகள் பறிமுதல்


கேக் உள்ளே பல்செட் கிடந்த விவகாரம்:விழுப்புரம் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைசுகாதாரமற்ற கேக், பிரட் வகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கேக் உள்ளே பல்செட் கிடந்த விவகாரத்தையடுத்து விழுப்புரம் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சுகாதாரமற்ற முறையில் இருந்த கேக், பிரட் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம்


விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் நேற்று முன்தினம் காலை வாடிக்கையாளர்கள் சிலர் டீ மற்றும் கேக் சாப்பிட்டனர். அப்போது ஒரு கேக்கின் உள்ளே 4 பற்கள் கொண்ட ஒரு பல்செட் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள், கடைக்காரரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி அவர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் இளங்கோவன், ஸ்டாலின், அன்புபழனி ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள டீக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அபராதம் விதிப்பு

அப்போது அந்த கடையில் உள்ள சமையலறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததும் மற்றும் அக்கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. உடனே அந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்தை அபராதமாக அதிகாரிகள் விதித்தனர். அதன் பின்னர் கோலியனூர் கூட்டுசாலையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தரமற்ற முறையிலும், ஈக்கள் மொய்க்கப்பட்ட நிலையிலும் கேக்குகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 5 கிலோ கேக்குகளை பறிமுதல் செய்து அந்த கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கினர்.

மேலும் ராதாபுரம் பகுதியில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையிலும், தரமற்ற முறையிலும் பேக்கரி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த 55 கிலோ எடையுள்ள கேக், பிரட் வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு அக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.

எச்சரிக்கை

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். எனவே உணவுப்பொருட்களை சுகாதாரமான முறையிலும், தரமானதாகவும் தயாரிக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story