சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சங்க பொறுப்பாளர் சரஸ்வதி தலைமையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லப்பிள்ளை, மாவட்ட செயலாளர் சவிதா ராஜலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களே முடிவெடுத்து வழங்கிட அனுமதிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை அவசர கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 750 ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள காய், கனி உணவூட்டும் செலவினத் தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.