ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்


ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி

ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் பொது வினியோகத்திட்ட ரேஷன் கடைகளில் தரமான உணவு பொருட்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் பொதுவினியோகத்திட்ட பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பரிசோதித்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்தார். ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்கு வைக்கப்பட்டு இருந்த அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மூட்டைகளின் எடை அளவு சரியாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

முன்மொழிவு

தொடர்ந்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு வரப்பெற்ற சர்க்கரை மூட்டைகளை எடை போட்டு அரசு நிர்ணயித்துள்ள அளவில் சர்க்கரை சரியாக இருப்பதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த கிடங்கில் கொட்டை அரிசி இருப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இந்த அரிசியை கிடங்கில் இருந்து அரசின் உரிய வழிமுறைகளின் படி, அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடங்கில் இருப்பில் வைத்து, மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கும் தங்குதடையின்றி வினியோகம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளை உரிய வேலை நேரத்தில் திறந்து செயல்படவும், அத்தியாவசிய பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை பிரித்து தனி கடைகளாக செயல்படுத்த முன்மொழிவுகளை தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும்.

அலுவலர்களுக்கு உத்தரவு

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களை தரமாகவும், தாமதமின்றியும், எடை குறையாமலும் உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன், தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், தாசில்தார் ராஜராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story