ஐவர் கால்பந்து போட்டி; ஜி.டி.என். கல்லூரி அணி சாம்பியன்
திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஜி.டி.என். கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரேடியன்ஸ் பப்ளிக் பள்ளியில், மாவட்ட அளவில் ஆண்களுக்கான ரேடியன்ஸ் கோப்பை ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நாக்-வுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், முதலாவது அரைஇறுதி போட்டியில் டி.எப்.சி. கொடைக்கானல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் என்.கே.பி.எப்.சி. அணியை வென்றது. மற்றொரு அரைஇறுதியில் ஜி.டி.என். கல்லூரி அணி 4-3 என்ற கோல் கணக்கில் நிலக்கோட்டை ஸ்டார் சோலார் அணியை வென்றது. இதையடுத்து ஜி.டி.என். கல்லூரி அணி, டி.எப்.சி. கொடைக்கானல் அணி ஆகியவை இறுதிப்போட்டியில் மோதின. அதில் ஜி.டி.என். கல்லூரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் சாம்பியனான ஜி.டி.என். கல்லூரி அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ரேடியன்ஸ் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த டி.எப்.சி. அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-ம் இடம் பிடித்த என்.கே.பி. எப்.சி. அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ம் இடம் பிடித்த ஸ்டார் சோலார் அணிக்கு கோப்பையும் வழங்கப்பட்டது. விழாவில் ரேடியன்ஸ் பப்ளிக் பள்ளி மேலாளர் எம்.எஸ்.அபுதாகிர் வாழ்த்தி பேசினார்.