ஆபத்தான நிலையில் உள்ள நடைபாலம்


ஆபத்தான நிலையில் உள்ள நடைபாலம்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் காணப்படும் நடைபாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் காணப்படும் நடைபாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாலம்

தஞ்சையை அடுத்து விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்ட மாவட்டம் திருவாரூர். திருவாரூரில் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள் தான் கண்ணில் படும். இருப்பினும் புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரசு துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என ஏராளமான நிறுவனங்களும் இங்கு உள்ளன.

இதனால் திருவாரூருக்கு தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே சிறிய நடைபாலம் உள்ளது.

போக்குவரத்து நெருக்கடி

திருவாரூர்- தஞ்சை சாலையில் இருந்து நகருக்குள் வருவதற்கு கல்பாலம் மற்றும் பழைய பஸ் நிலையம் வழித்தடம் மட்டுமே உள்ளது. இந்த இருவழித்தடங்களும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும்.

திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளதால் எளிதாக நகருக்குள் வருவதற்கு மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றுப்பாலம் மிகுந்த பயன் அளித்து வருகிறது.மடப்புரம் அருகில் தனியார் பள்ளிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளதால் வெளியூர்களில் இருந்து வருபவர்களும் மடப்புரத்தில் உள்ள பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆபத்தான நிலையில்...

இதனால் பாலத்தில் எந்த நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எதிர் எதிரே மோட்டார் சைக்கிள்கள் கூட செல்ல முடியாத நிலையில் பாலம் குறுகலாக உள்ளது. இந்த பாலம் இடிந்தால் மடப்புரம் பகுதிக்கு வருபவர்களும், இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களும் வெகுதூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தற்போது இந்த பாலம் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தை அவ்வப்போது தற்காலிகமாக சீரமைப்பு செய்தாலும், பாலம் தொடர்ந்து வலுவிழந்து ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் வேறு வழியின்றி பாலத்தை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றுப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவாக செல்ல இந்த பாலம் பயன்பட்டு வருகிறது.

மேலும் திருவாரூர் நகர் பகுதிக்கு இணைப்பு பாலமாகவும் இருந்து வருகிறது. தற்போது சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக அகலமான பாலத்தை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story