தொடர்ந்து 47 நாட்களாக 102 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம் விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகள் மகிழ்ச்சி
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 47 நாட்களாக 102 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
இந்த அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
102 அடியாக நீடிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 5-ம் தேதி காலை 9 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது வருடமாக 102 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டது.
தொடர்ந்து 47-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவே நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.