பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமா?- சுகாதார இணை இயக்குனர் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக நடந்தார்களா? என்பது பற்றி சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக நடந்தார்களா? என்பது பற்றி சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வலியால் துடித்த கர்ப்பிணி
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மனைவி கடந்த ஆண்டு கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு முறையான பரிசோதனையை கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்து வந்தோம். இந்த நிலையில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து எங்கள் வீட்டில் இருந்து கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றோம்.
அங்கு இருந்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் என் மனைவிக்கு குழந்தை பிறக்க இன்னும் 15 நாள் ஆகும். எனவே வீட்டிற்கு சென்று 2 வாரம் கழித்து வாருங்கள் என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் என் மனைவி தொடர்ந்து பிரசவ வலியால் துடித்தாள்.
அலட்சியம்
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். பின்னர் அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு சென்ற 10 நிமிடத்தில் என் மனைவிக்கு குழந்தை பிறந்துவிட்டது.
பிரசவ வலியால் துடித்த என் மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க மறுத்து அலட்சியப்படுத்திய கடையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
பல்வேறு வசதிகள்
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் கே.பி.நாராயணகுமார் ஆஜராகி, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச பிரசவ சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு மாநில அரசு ஏராளமான வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அங்கு மனுதாரரின் மனைவிக்கு ஏற்பட்ட நிலை போல எண்ணற்ற கர்ப்பிணிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலட்சியப்படுத்தப்படுகின்றனர், என்றார்.
பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் புகார் குறித்த விசாரணை நடந்து வருகிறது. மனுதாரருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
ஆஜராக உத்தரவு
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர், வட்டார மருத்துவ அதிகாரி ஆகியோர் வருகிற 21-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.