பிணை பத்திரத்தை மீறியவருக்கு ஜெயில் தண்டனை
தூத்துக்குடியில் பிணை பத்திரத்தை மீறியவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் சாலமோன். இவருடைய மகன் பெரியசாமி (வயது 44). இவரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கடந்த 27.6.2022 அன்று குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 110-ன் படி தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் உதவி கலெக்டர் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தினர். அங்கு பெரியசாமி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 6 மாத காலத்துக்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்து பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். பிணை பத்திரம் பெறப்பட்ட 6 மாத காலம் முடிவதற்குள் கடந்த 2-ந் தேதி ஒரு கொலை மிரட்டல் வழக்கில் வடபாகம் போலீசார் பெரியசாமியை கைது செய்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து பிணை பத்திரத்தை மீறியதால், பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசார், உதவி கலெக்டர் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில் உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், பெரியசாமியை குற்றவியல் நடைமுறைச்சட்டம் 122 (1) (b) -ன் படி 23.12.22 வரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.