தீயணைப்பு படையினருக்குநவீன மூச்சுக்கருவி வழங்கல்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தீயணைப்பு படையினருக்கு நவீன மூச்சுக்கருவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 தீயணைப்பு நிலையங்களுக்கும் புகை சூழந்த இடங்கள் மற்றும் விஷ வாயு தாக்கிய இடங்களில் சிக்கிய மக்களை மீட்பதற்காக நவீன மூச்சுக்கருவிகள் நேற்று வழங்கப்பட்டன.
பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 தீயணைப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு துறையினருக்கான 2023-ம் ஆண்டின் முதல் கட்ட நினைவூட்டு பயிற்சி மற்றும் துறை சார்ந்த பயிற்சி நேற்று தூத்துக்குடியில் நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ச.குமார் தலைமை தாங்கி, தீயணைப்பு பணிகளின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் இ.ராஜூ முன்னிலை வகித்தார்.
தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு துறை சார்ந்த பயிற்சிகளான அணிப் பயிற்சி, ஏணிப் பயிற்சி மற்றும் நீர் தாங்கி வண்டி பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மூச்சுக்கருவிகள்
மேலும், பயிற்சியின் முடிவில் அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் தலா ரூ.94 ஆயிரம் மதிப்பிலான மூச்சுக்கருவிகள் வழங்கப்பட்டன.
தீ விபத்து மற்றும் மீட்புபணியின் போது புகை சூழ்ந்த இடங்கள், விஷவாயு உள்ள இடங்களில் சிக்கியிருப்போரை மீட்பதற்கு இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கருவியை பயன்படுத்தும் முறை மற்றும் அதன் செயல்பாடுகள் தீயணைப்பு துறையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.