அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
கயத்தாறு அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக பெண் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அரசு பள்ளி ஆசிரியரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம்தொடர்பாக பெண் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பஞ்சாயத்து தலைவர்
கயத்தாறு அருகே திருமாலபுரம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கண்ணன். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவர்களது மகன் செல்வக்குமார். இதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்த சுபாக்நாயக்கர் மகன் சுப்புராஜ்(வயது 53). இந்த 2 பேர் குடும்பத்தினருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலில் இருந்து முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அருகருகே உள்ள இருவரது தோட்டங்களுக்கு இடையிலுள்ள வரப்பில் நேற்று கண்ணன் கம்பி வேலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு அவரது மகன் செல்வக்குமார், மனைவி ராஜேஸ்வரியும் இருந்ததாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் அங்கு வந்த சுப்புராஜ் கம்பி வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் சுப்புராஜை வெட்டியுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புராஜ் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் கண்ணன் அவரை துரத்தி சென்று வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, 108ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கழுகுமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாசீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
3 பேருக்கு வலைவீச்சு
மேலும் இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், அவரது மனைவி ராஜேஸ்வவி, மகன் செல்வகுமார் ஆகியோரை தேடினர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அந்த 3பேரையும் தேடிவருகின்றனர்.