நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
வணிகர்களிடம் அரசு கெடுபிடி காட்டவில்லை என்றும், நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
நாகர்கோவில்:
வணிகர்களிடம் அரசு கெடுபிடி காட்டவில்லை என்றும், நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
ஆய்வு கூட்டம்
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி மற்றும் கலெக்டர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல்வேறு திட்டங்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையை பொருத்த வரை 39 புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதால் பத்திரப்பதிவுத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வணிகவரித்துறையில் ரூ.21,500 கோடியும், பதிவுத்துறையில் ரூ.3 ஆயிரம் கோடியும் வருவாய் உயர்ந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பத்திரப்பதிவில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3 அடி முதல் 4 அடியில் மட்டுமே பாதைகள் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள நிலங்களை பதிவு செய்வதால் சிக்கல்கள் உள்ளது. எனவே இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம்.
கெடுபிடி காட்டவில்லை
டெஸ்ட் பர்சேஸ் (சோதனை) என்ற பெயரில் வணிகர்களிடம் தமிழக அரசு எந்தவித கெடுபிடியும் காட்டவில்லை. வணிகர்களுக்கு பாதுகாவலனாக இந்த அரசு விளங்கி வருகிறது. நியாயமாக, நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மக்களிடம் வாங்கக்கூடிய வரி அரசுக்கு முறையாக செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். இதில் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. டெஸ்ட் பர்சேஸ் குறித்து வணிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் சிவனருள், மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், உதவி கலெக்டர் குணால் யாதவ் (பயற்சி), கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.